ஜீவ அங்க சமாதி

ஜீவ அங்க சமாதியை பற்றிய முழு விவரம் ஒரு ஞானமடைந்த குருவின் கண்ணோட்டத்திலிருந்து

ஜீவ அங்க சமாதி

ஜீவ அங்க சமாதி என்றால் என்ன…

 • ஜீவனை அங்கத்திலேயே சமாதி நிலையில் ஆழ்த்தி நிறுத்தி விடுவது ஜீவ சமாதி ஆகும்.
 • ஜீவ சமாதியில் எத்தனை வருடங்கள் ஆனாலும் திருமேனி அழியாது.
 • ஜீவனை தாங்கி நிற்கும் திருமேனியே சிவ சொரூபமாக கருத்தபடுகின்றது.
 • நமது பாரத தேசத்தில் ஜீவ சமாதிகள் இல்லாத இடமே இல்லை.
 • ஜீவ சமாதியில் மகான்களின் ஜீவ ஆத்மா முழுமையாக ஜீவ சமாதியில் ஒடுங்கி இருந்தாலும் அதில் ஒரு கலை மட்டும் எங்கும் வியாபித்து இருக்கும். அந்த தெய்வீக கலையே வரும் பக்தருக்கும், சீடர்களுக்கும் அருள் மழை பொழிந்து கொண்டிருக்கும்.
 • ஜீவ சமாதியில் தவம் புரியும் அன்பர்கள் அந்த தெய்வீக கலையை பற்றிய விழிப்புணர்வுடன் தவம் புரியும் போது அந்த தெய்வீக கலை அவர்கள் உடல் முழுவதும் வியாபிக்கும். இதனை நாம் நன்கு உணரலாம்.
 • அவ்வாறு மகானின் தெய்வீக கலை நம்மை ஊடுருவும் போது நாம் விழிப்புணர்வுடன் இருந்து அப்போது நமது பிரார்த்தனைகளை விண்ணப்பிக்க வேண்டும்.
 • அவ்வாறு சமர்பிக்கபடும் அனைத்து பிரார்த்தனைகளும் மகானின் திருவருளால் நிறைவேற்றபடும்.
 • நிறைய சமயம் மகானின் தெய்வீக கலை, ஜீவ சமாதி ஆலயத்தை பராமரிக்கும் குருக்களின் மேல் பிரசன்னமாகி நமக்கு தேவையான உபாயங்களை உரைத்திடும்.
 • ஜீவ சமாதி அடைந்து உள்ள மகானின் திருவுள்ளத்தில் நம்மை நினைத்தால் நாம் எங்கு எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அப்போது மகானின் தெய்வீக கலை நம்மை தேடி வந்து ஆசீர்வதிக்கும். அவ்வாறு நாம் ஆசீர்வதிக்க படும் போது அதனை நன்கு உணரலாம்.
 • அப்போது நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அதனை விடுத்து வேறு ஒரு தெய்வீக சூழ்நிலைக்கு உந்தப்படுவோம்.
 • ஜீவ சமாதிக்கு திருப்பணி செய்வது புண்ணியத்திலும் புண்ணியம் ஆகும்.
 • ஜீவசமாதியில் பக்தர்கள் பலர் வந்து போவதைபோல், பல புண்ணிய ஆத்மாக்கள் அங்கு தங்கி வழிபட்டு வரும்.
 • அவ்வாறு தங்கி உள்ள புண்ணிய ஆத்மாக்களே குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகானின் அருளால் குழந்தையாக பிறக்கும்.
 • மகானின் ஜீவ சமாதிக்கு உள்ளதை அன்புடன் தொண்டு புரியும் பக்தர்களுக்கு மரண அவஸ்தை நிச்சயம் கிடையாது.
 • ஜீவ சமாதியில் ஆழ்ந்திருக்கும் ஒவ்வொரு மகானும் அவருக்கென்று தனிதன்மையான நறுமனத்தை பிரயோகம் செய்வார்கள்.
 • இந்த நறுமனத்தை கொண்டே நாம் எப்போதெல்லாம் மகானின் தெய்வீக கலை நம்மை ஆசீர்வதிக்க வருகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
 • மகான்கள் ஜீவ சமாதியில் அமர்ந்த பிறகு அங்கு சமாதி பீடம் அல்லது ஆலயம் கட்டப்படும். பிற்காலத்தில் பராமரிப்பு இன்றி ஆலயம் சிதிலம் அடைந்து ஆழ்ந்தால், மகான்களின் ஜீவ சரீரம் அவ்விடத்தை விட்டு அகன்று தங்களுக்கு பிடித்த வேறு ஓரிடத்தில் நிலை கொள்ளும்.

– குருஜி சுந்தரின் ஆன்ம அனுபவங்கள்

 

ஜீவ அங்க சமாதியின் விளக்கம்

மகான்களுக்கு இந்த நில உலகில் வருவதும் போவதும் ஒரு மாய விளையாட்டு . சில மகான்கள் இந்த நில உலகிற்கு வந்து பல்வேறு ஆன்மீக சாதனைகளையும் ஆன்மீக தொண்டுகளையும் ஆற்றியபிறகு நம் பணி இத்துடன் நின்று போய்விட கூடாது, இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்று முடிவு செய்த பின்பு இந்த மஹா பிரபஞ்சத்தின் ஆலோசனையுடன் ஒரு திருநாள் தேர்வு செய்து மஹா பிரபஞ்சம் இசைவுடன் திரு நேரத்தையும் முடிவு செய்து அந்த தெய்வீக நிகழ்ச்சியை பக்தர்கள் அனைவருக்கும் சூசகமாகவும் நேரிலும் உணர்த்தி அழகாக அனைத்து ஆயத்தங்களையும் செய்து முடிப்பர். அந்த திருநாளில் பக்தர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு தன் ஆசனத்தில் அமர்ந்து தன இறை நிலையில் மூழ்குவார்கள் அல்லது இறை நிலையில் மூழ்கும் போது தான் வாழ்ந்த காலத்தில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள், அவர்களின் மனக்கண் முன் தோன்றும். அதனை பார்த்துவிட்டு தன உடலை கடப்பார்கள். பின்பு மனம் என்னும் கருவியையும் கடப்பார்கள், பின்பு தான் என்னும் அக உணர்வில் நிலை பெறுவார்கள்.

அவர்கள் உடல், மனம் இவற்றை கடக்கும் போது இதுவே இறுதி சந்திப்பு என முடிவு செய்து தன கடப்பார்கள். ஆகவே திரும்பவும் எக் காரணத்தை கொண்டும் அவர்களின் தடம் என்னும் மகா பிரகாசம் உடல், மனம் இவற்றின் மீது திரும்பாது . அவர்கள் தான் எனும் அக சுய உணர்வில் நிலைத்து கொள்ளுமாறு நிற்பார்கள் இந்த தெய்வீக நிலை பல ஆயிரம் ஆண்டுகள் தொடரும் . அந்த சுய பிரகாச ஜோதி ஆன்மீக அருளாசியை வாரி வழங்கி கொண்டிருக்கும்.

 

வாழ்க மகானின் கருணை

இவை அனைத்தும் மகானின் திருவுளம் திறந்து கூறியவை

 

ஜீவ சமாதியின் சிறப்புகள்

தன்னை உணர்ந்து தெளிந்த மகான்கள், ஜீவன் முக்தர்கள் தாங்கள் இதுவரை இந்த உடலுடன் மக்களுக்கு உழைத்து போதும், இனி தங்கு தடையில்லாமல் எப்போதும் அந்த பேரின்பதிலேயே லயித்து, லயம் ஆகி நிற்கலாம் என்று முடிவு எடுப்பார்கள். அந்த முடிவு அவர்கள் மற்றும் தனியே எடுப்பதில்லை. மேலிடத்திலிருந்தும், அதற்கு ஆமோதிப்பு வரும். அதற்கு பின்பே அவர்கள் ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்து சரியான நேரத்தை கணித்து, ஊர் மக்களுக்கு எல்லோருக்கும் அதனை அறிவித்துவிட்டு, அவர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கிவிட்டு சமாதியில் இறங்கி மோன தபத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்.

தியானத்தில் ஒரு எல்லையை தாண்டும் வரை அவர்களின் இறந்த மனம் பழைய உறவுகளை, சம்பந்தங்களை, நிகழ்ச்சிகளை, எல்லாம் எடுத்து காடும். அந்த எல்லையை அவர்கள் தாண்டிவிட்டால் பின்பு மனமும் இல்லை, எதுவும் இல்லை, எல்லாம் அந்த பரம்பொருளே எங்கும் வியாப்பித்து இருக்கும். ஆனாலும், ஜீவ அங்க சமாதியில் ஒரு நுட்பமான பேரியிக்க தன்மையில் தான் என்ற உணர்வு கொலுவீற்றிருக்கும்.

அந்த உணர்வு மகானின் நெருங்கிய சொந்தங்கள், மற்றும் சிஷ்ய கோடிகள் மற்றும் அவரை நினைத்து உருகும் ஆன்மீக குழந்தைகள் ஆகியவர்களின் வருகை அமையும் போது அந்த உணர்வு அதிர்வுறும். அந்த அதிர்வுகள், வந்திருக்கும் மக்கள் அனைவரிடமும் சொல்ல முடியாத, வார்த்தைகளில்லாத, பல அனுபவங்களை ஏற்படுத்தும். அவரின் அந்த அதிர்வலைகள் ஆன்மீக வளர்ச்சிக்காக வரும் அன்பர்களின் ஆன்மீக வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும். அப்போது ஆன்மீக அன்பர்கள் மற்றும் தபஸ்விகள் தவம் இயற்றும்போது, யார் யாருக்கு, எந்த இடத்தில் எவ்வாறு தவம் இயற்ற வேண்டும் என்ற வழியில்லாத வழியை மகான்கள், தபஸ்விகள், ஞானிகள், மாமுனிகள் மட்டுமே காட்ட முடியும்.

ஆகவே ஜீவ சமாதிகள் எங்கு இருந்தாலும், அங்கு போய், அங்கு அடங்கி இருக்கும் மகானுடனும் அவரின் நுண்ணிய அதிர்வலைகளிடமும் நாம் தொடர்பு வைத்துகொண்டால் இந்த மானிடப் பிறவியில் நாம் எதை சாதிக்க வேண்டும் என்று நர உடலை எடுத்தோமோ அந்த சாதனைக்கு முதல் அடி எடுத்து வைத்தது போல ஆகும். தினமும் ஜீவ சமாதியில் உள்ள மகானை உள்ளார்ந்த அன்போடும், திவிரபக்தியுடனும், நாம் தரிசித்து வந்தால், எல்லா பலன்களையும் அடையலாம். பெறுவதிலும் அரிய பேராம் வீடு பேற்றை எளிதில் அடையலாம். –

எங்களின் குருஜி சுந்தர் அவர்களுக்கு அருள்மிகு மகான் ஸ்ரீ குருலிங்க சுவாமிகளால் 1999 ஆம் ஆண்டு உணர்த்தப்பட்டது.

ஜீவ சமாதி தரிசனதால் கிடைக்கும் நற்பலன்கள்

 

 1. இது புனிதமான இடம். இந்த இடத்தில் சித்த புருஷர் ஜீவசமாதியில் உறைந்திருக்கும் இடம்.
 2. இந்த புனிதமான இடத்தில் நீங்கள் தரிசனம் செய்தால் உங்களின் பாவ பதிவுகள் அனைத்தும் பறந்தோடிவிடும்.
 3. இந்த புனித இடத்தில் நீங்கள் உட்கார்ந்து தவம் இயற்றினால் உங்களின் ஆத்மா பரிசுத்தம் அடையும்.
 4. ஆன்மீக தாகம் கொண்டவர்கள் இங்கு தவம் இயற்றும் போது மகானின் சூக்கும சரீரம் உங்களுள் ஊடுருவுவதை கண்கூடாக உணர்வீர்கள்.
 5. உங்களின் தேவையற்ற சிந்தனைகள், கட்டுப்பாடில்லாத எண்ண ஓட்டங்கள் மற்றும் உங்களை படுகுழியில் தள்ளிவிடும் அர்த்தமற்ற ஆசைகள் அனைத்தும் நின்று போகும்.

ஜீவன் முக்தர் உறையும் இடத்தில் தொடர்ந்து நித்திய கருமமாக நீங்கள் தவம் இயற்றினால் நீங்கள் இந்த மனிதப் பிறவி எடுத்ததற்கான முழு அர்த்தத்தை உணர்ந்து அந்த பெருவதற்கு அரிய   பேறையும் அடைவீர்கள்

 

ஜீவ சமாதியில் கடைபிடிக்க வேண்டிய நியதிகள்

 1. பக்தி சிரத்தையோடு காலை உள்ளே வைக்க வேண்டும்.
 2. மனதை முழுமையாக மகானின் சன்னதியில் செலுத்த வேண்டும்.
 3. மூச்சை மகானின் சிவலிங்கத்தில் இருந்து இழுத்து உடல் முழுவதும் செலுத்த வேண்டும்.
 4. மூச்சுக் காற்றை குறைந்தது 9 முறையாவது அவ்வாறு இழுக்க வேண்டும்.
 5. அவ்வாறு மூச்சை இழுத்து விழும் போது உடல் முழுவதும் ஆனந்த அதிர்வலைகள் உருவாகின்றதை நன்கு உணரலாம்.
 6. குறைந்தது ஐந்து நிமிடம் சன்னதியின் முன் உட்கார்ந்து மகானின் திரு உருவத்தின் மீது மனதை தியானிக்க வேண்டும்.
 7. உங்களின் குறைகளை மகானின் முன், அமைதியில் வெளிப்படுத்த வேண்டும்.
 8. உங்களின் குறைகள் தீர்வு பெற்ற பின்பு உங்களால் ஆன உதவிகளை மகானின் கோவிலுக்கு செய்ய வேண்டும்.
 9. உடல் உழைப்பாக இருந்தாலும் சரி, கோவிலுக்கு தேவைப்படும் அகர்பத்தி, எண்ணை, பூ, இவற்றை செலுத்தினாலும் நல்லது.
 10. மகானின் கோவிலுக்கு செல்லும் போது சிறந்த நறுமணம் கொண்ட ஊதுவத்தியுடன் செல்வது மிக சிறந்த பண்பாகும்.
 11. ஜீவசமாதியில் தியானம் செய்யும் போது நம் பாவ வினைகளின் தீவிரம் குறையும்.
 12. ஜீவ சமாதிக்கு செல்லும் போது மகானின் சன்னதி மிகவும் ஏழ்மை நிலையிலும், பராமரிப்பு இல்லாமல் இருந்தால், அதனை சரி செய்வதற்கு நம் சக்திக்கு முடிந்த வரை முயல வேண்டும்.
 13. மகானின் ஜீவசமாதிக்கு தொண்டு புரியும் போது, நான் என்ற அகம்பாவம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

 

ஜீவ சமாதி தரிசனம் இன்னும் விரைவில்